Media reports- Tamil- Article – BBC

Posted on January 7, 2011


07 ஜனவரி, 2011 – பிரசுர நேரம் 15:23 ஜிஎம்டி
மீள்குடியேற்றம்: “ஆணைக்குழு தேவை”

 

இலங்கையின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அந்த மக்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கான ஆணைக்குழு ஒன்றை நியமிக்கப்பட வேண்டும் என புத்தளத்தில் இன்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஆணைக்குழு முன்னிலையில் வெள்ளியன்று சாட்சியமளித்த முன்னாள் யாழ் நகர துணை மேயராகிய எம்.ஜி.பசீர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.  இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்து புத்தளத்திலேயே வசிக்க விரும்புபவர்களும் இருப்பதாகவும், இவ்வாறு வசிப்பதற்கு விரும்புபவர்களுக்கான பாதுகாப்பு, வாழ்வாதாரம் என்பன தொடர்பில் விசேட வேலைத்திட்டம் வகுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் பொலன்னறுவ மாவட்டம் கதுருவெல என்ற இடத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட தொண்டு நிறுவனப் பணியாளராகிய பட்டாணி ராசிக் என்பவரைக் கண்டுபிடித்துத் தருமாறு இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த அவரது மகனான ராசிக் ரிஸ்கான் முகமட் கோரியிருக்கின்றார்.

தனது தந்தையாரின் கடத்தல் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படுபவர் பற்றிய தகவல்கள் பொலிசாருக்குத் தெரிந்திருந்தும் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதையும் ஆணைக்குழுவிடம் ரிஸ்கான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள முஸ்லிம் குடும்பங்களினால் தமக்குரிய வாழ்வாதாரங்கள், தொழில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட பல விடயங்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றிற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.  

ஆணைக்குழுவின் விசாரணைகள் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மன்னாரில் நடைபெறவுள்ளன.

Advertisements